கொரோனா பரவுவதை தடுக்க தற்போது ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியம்
சென்னை: கொரோனா தடுப்பு தொடர்பாக தமிழக மக்களுடன் முதல்வர் பழனிசாமி உரை நிகழ்த்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தமிழக அரசு இதனை கட்டுப்படுத்துவதற்கு நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. இதனிடையே நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக மக்களுடன் முதல்வர் பழனிசாமி உரை நிகழ்த்தி வருகிறார். அவர் கூறியதாவது;
* கொரோனா பரவுவதை தடுக்க தற்போது ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியம்.
* தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன்.
* 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு; கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம்.
* கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு...
* அரிசி, பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு.
* மத்திய அரசின் வேண்டுகோளின் படி 21 நாட்கள் நாம் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்.
* வைரஸ் நோய் எப்படி பரவுகிறது என்பதை அறிந்து தடுக்கும் வகையில் செயல்படுவது காலத்தின் கட்டாயம்.
* கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் பணிகளுக்கு ரூ.3,780 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் 10,518 படுக்கைகள் தயாராக உள்ளன.
* கட்டிட தொழிலார்கள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.1000 மற்றும் 15 கிலோ அரிசி வழங்கப்படும்.
* அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும், மக்கள் அச்சப்பட வேண்டாம்; சமூக விலகலை கடைபிடியுங்கள்.
* ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
* பொறுப்பான குடிமக்களாக இருந்து சமூதாயத்தை காப்போம்.
* மருத்துவர்களின் உதவியின்றி சுய மருத்துவம் செய்ய வேண்டாம்.
* கொரோனாவிலிருந்து தமிழகத்தையும், தமிழக மக்களையும் காக்க உறுதியேற்போம்.
0 Comments